நூதன மோசடி சேலத்தை சேர்ந்த 2 பேர் பணத்தை இழந்தனர்

by Admin / 10-03-2022 04:47:14pm
 நூதன மோசடி சேலத்தை சேர்ந்த 2 பேர் பணத்தை இழந்தனர்

சேலம் இரும்பாலை விவேகனந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 54).  இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவருடன் நட்பு கிடைத்துள்ளது. 

அந்த நபர் இந்தியாவில் பார்மசிஸ்ட் தொழில் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் உனது பெயரிலேயே தொடங்க உள்ளதாகவும் கூறி வரும் லாபத்தில் ஆளுக்கு 50 சதவிகிதம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த நபர் தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்தபோது கையில் எடுத்து வந்த பணத்தை டெல்லி விமான நிலையத்தில் சுங்க இலாகா துறை அதிகாரிகள் பிடித்து விட்டதாகவும், அதற்கு வரியாக ஒரு லட்சத்து 61 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்றும் செல்போனில் சுரேஷிடம் கூறியுள்ளார்.
 
இதை உண்மை என்று நம்பிய சுரேஷ், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் சேலம் புதிய பஸ்நிலையம் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (41). இவரை தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் ஏர்டெல் நிறுவனத்தின் பேன்சி செல்போன் நம்பர்கள் இருப்பதாகவும், அந்த எண்கள் ஏலத்தில் விட இருப்பதாகவும் அதற்கு முன் தொகையாக ரூ.59 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென்று கூறிஉள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய கனகராஜ் அவர் தெரிவித்த வங்கி கணக்கில் 59 ஆயிரம் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பிறகு அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via