எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால் மீனவர்கள் சலுகைகள் ரத்து

by Admin / 12-03-2022 10:30:27am
எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால் மீனவர்கள் சலுகைகள் ரத்து

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் தங்கி ஆழ்கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
 
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 33 மீனவர்கள் செ‌ஷல்ஸ் பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கடலோர காவல் படையினர் கைது செய்தனர். 

மேலும் அந்தமானில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 8 மீனவர்கள் இந்தோனேசியாவில் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

இதேபோல் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற தூத்தூர் பூத்துறை பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள் செ‌ஷல்ஸ் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 66 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ் அனைத்து விசைப் படகு சங்கங்கள், மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள், பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளார்.

சமீப காலங்களில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடை செய்யப்பட்ட கடற்பகுதிகளில் குமரி மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே அத்துமீறி சட்ட விரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் குமரி மாவட்ட விசைப்படகு மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விசைப்படகு உரிமையாளர்கள் உரிய அறிவிப்பு வழங்கிய பின்பு விசைப்படகின் பதிவு மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல இயலாதவாறு தொழில் முடக்கம் செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும். விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரின தொழில்நுட்ப அடையாள அட்டை ரத்து செய்யப்படும். 

மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நிவாரணங்கள் மானியங்கள் மற்றும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.  

 

Tags :

Share via