அரசு அதிகாரிகளுக்கே பதவி உயர்வு கேரளாவில் அதிரடி அறிவிப்பு

by Admin / 17-03-2022 03:15:23pm
 அரசு அதிகாரிகளுக்கே பதவி உயர்வு கேரளாவில் அதிரடி அறிவிப்பு

கேரளாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு இதுவரை உயர் அதிகாரிகள் அளிக்கும் ரகசிய குறிப்புகள் மற்றும் அவர்களின் திறமை, பணி மூப்பு ஆகியவையே அளவுகோலாக இருந்து வந்தது.
 
இதனை மாற்றி புதிய முறையில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வை அறிவிக்க கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முயற்சி மேற்கொண்டது.

இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல புதிய திட்டங்களை இத்துறை அறிவித்தது. அதில் உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி ஊழியர்களின் பணித் திறமை குறித்த மதிப்பெண் மூலம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன்படி ஒரு ஊழியர் பதவி உயர்வு பெற மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பணியாளரின் திறமை, அவர் பணியிடத்தில் நடந்து கொள்ளும் முறை, அலுவலக கோப்புகளை விரைவாக பார்த்து அனுப்புவது, அதன் குறைகனை உடனடியாக சுட்டிக்காட்டுவது ஆகியவற்றுக்கு மதிப்பெண் போடப்படும்.

இந்த மதிப்பெண் 1 முதல் 10 வரை இருக்கும். அதிக மதிப்பெண் எடுக்கும் ஊழியருக்கே பதவி உயர்வு வழங்கப்படும். 5 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுக்கும் ஊழியருக்கு பணியாளர் நலத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு போடப்படும் மதிப்பெண்ணில் அவர்கள் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்கிறார்களா? என்பதும் கண்காணிக்கப்படும். மேலும் அவர்கள் மீது பொதுமக்கள் தொடர்ந்து புகார் அனுப்பினால் அதுவும் ஊழியரின் பதவி உயர்வை பாதிக்கும்.

அதோடு அலுவலகத்தில் பணி நேரத்தில் அடிக்கடி சீட்டை விட்டு வெளியே சென்றாலும் அவர்களுக்கான தர மதிப்பெண் குறைக்கப்படும் என்று பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை கூறியுள்ளது.

கேரள அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த அறிவிப்புகளுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த சீர்திருத்தம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வை பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via