ஸ்டேஷனில் சிக்கிய கேரள நகைத் திருடன் :
கடந்த 21 ஆம் தேதி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராஜேஷ் மண்டல் என்பவர் திருச்சூர் பகுதியில் உள்ள சுஷாந்த் நகை பட்டறையில் 66 கிராம் தங்கத்தை திருடிச்சென்று தப்பி ஓடிவிட்டதாக கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜேஷ் மண்டல் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், மேலும் ராஜேஷ் மண்டலின் சிறுவயது புகைப்படம் அனுப்பி வைத்து, பார்த்தால் கைது செய்யக்கோரி கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கையில் டாட்டூ குத்திய அடையாளத்தை முக்கியமாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தேடுதலில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
அவரை பிடித்து சோதனை செய்து பார்க்கும் பொழுது கையில் டாட்டூ குத்தப்பட்டு உள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து உள்ளனர். விசாரணையில் கேரளாவிலிருந்து நகையை திருடி தப்பிச்சென்ற ராஜேஷ் மண்டல் என்பது உறுதியானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு ரயிலில் ஏறி தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் மண்டலை அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அறுபத்தி ஆறு கிராம் தங்கத்தை கேரள போலீசாரிடம் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
Tags :