சென்னையில் : அட போங்கப்பா அடுத்த எல்லைக்குப்போனாலும் இ-பதிவா?

by Editor / 18-05-2021 10:31:18am
சென்னையில் : அட போங்கப்பா அடுத்த எல்லைக்குப்போனாலும் இ-பதிவா?

சென்னையில் பொதுமக்கள் தங்கள் சரக காவல் நிலைய எல்லைக்கு வெளியே செல்வதற்கு இ-பதிவு அவசியம் என மாநகர காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. உரிய அனுமதியின்றி வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இ- பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து தேவையின்றி மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மறு காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via