நீட் குறித்து கருத்து கூற விரும்பவில்லை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

by Staff / 30-03-2022 01:17:04pm
நீட் குறித்து கருத்து கூற விரும்பவில்லை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஆய்வரங்கத்தில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்  பங்கேற்று பேசுகிறார். 

அதற்காக தஞ்சை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் தமிழிசை வருகை தந்தார். பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை கிளம்பிச் சென்றார்.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில், ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 4வது அலை நிச்சயம் வரும் என்கிறார்கள். 

எனவே, அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் அதனை செலுத்திக் கொள்ள வேண்டும். 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசியும், 60 வயது முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்த வேண்டும்'' என்றார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத்தலைவரை  சந்திக்கவிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. 

தமிழகத்திற்கு வருவதும், செய்தியாளர்களை சந்திப்பதும் எனக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், மற்ற ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்ட தமிழகத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க நான் விரும்பவில்லை" என்றார்.

 

Tags :

Share via