மோடி இன்று குஜராத் பயணம்!
குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் 'டாக்டே' புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று (மே 19) குஜராத் செல்கிறார்.குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த 'டாக்டே' புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு ஏழு பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். டில்லியில் இருந்து, காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிடுகிறார். மேலும் உனா, டையூ, ஜபராபாத், மஹூவா பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார். ஆமதாபாத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளார்.
Tags :