விசைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் கடலுக்குச் செல்ல தடை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

by Editor / 12-04-2022 10:17:34pm
விசைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் கடலுக்குச் செல்ல தடை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் 61 நாட்கள் மீன் பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை (இருநாட்களும் உள்பட) 61 நாட்கள் கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாணையின்படி 2022ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை (இருநாட்களும் உள்பட) 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கடந்த பிப்.7ம் தேதி முதல் விசைப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via