கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகளை  வழங்க மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

by Editor / 20-05-2021 07:46:15pm
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகளை  வழங்க மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

 


கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி எம்பி அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து திரும்புவர்களை மியூகார்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தற்போது பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திமுக மக்களவை குழு துணைத் தலைவருர் கனிமொழி எம்.பி., நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மத்திய வேதியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடா,  மத்திய வேதியியல் அமைச்சகத்துக்கு உட்பட்ட மருந்துத்துறையின் செயலாளர் அபர்ணா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதங்களை எழுதியுள்ளார்.
அதில், தற்போது நம் நாட்டில் மியூகார்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு  மீண்டு வரும் நோயாளிகளை இந்த கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று  முக்கியமாக பாதிக்கிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலைப் பரவலுக்கு இடையே,  நாட்டில் மியூகார்மைகோசிஸ் தொற்றின் விகிதமும்  அதிகரித்து வருகின்றது.   ராஜஸ்தான் மாநிலம் ஏற்கனவே  மியூகார்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சையை ஒரு தொற்றுநோயாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில் கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் லிபோசோமல்  ஆம்போடெரிசின் பி அல்லது ஆம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளின் விநியோகம் குறைந்து வருகிறது. இம்மருந்துகளுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த மருந்திற்கு தமிழகத்திலும் பற்றாக்குறையாக நிலவுகிறது. எனவே இந்த மருந்து விநியோகத்தை தேவைக்கேற்ப அதிகரித்திட அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும் இந்த முக்கிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இந்த மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான  முக்கியமான மூலக்கூறு மருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் உரிய அனுமதிகளை அளித்து, எந்த இடையூறும் இல்லாமல் மருந்துகளின் தயாரிப்புக்கு  அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via