தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்துகிறார் ஆளுநர், இ. கம்யூ . முத்தரசன் குற்றச்சாட்டு

by Editor / 28-04-2022 08:27:59am
தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்துகிறார்  ஆளுநர், இ. கம்யூ . முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழக அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகவும், ஒரு பொய்யை திரும்ப , திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற நம்பிக்கை அண்ணாமலை போன்றோருக்கு இருக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 
 நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்னு மருமகனும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன் திருவுருவப்படம் திறக்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா தடுப்பு குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் பாஜக ஆட்சி இல்லாத , பிற கட்சிகள் ஆட்சி நடத்தக்கூடிய மாநில முதல்வர்கள் சரிவர செயல்படவில்லை என்று அதிருப்தி  தெரிவித்தார் என்ற  செய்தி சொல்லப்படுகிறது. அவ்வாறு பிரதமர் கூறியிருந்தால் அது தவறான கருத்து.திமுக அரசு பொறுப்பு ஏற்ற போது கொரோனா, பொருளாதார நெருக்கடி, ஒன்றிய அரசு ஒத்துழைப்பு இல்லாமை இவ்வளவுக்கும் மத்தியில் அதை மிக சாதுரியமாக சமாளித்து மக்களை காப்பாற்றிய பெருமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.கொரோனா காலத்தில் கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன் எப்படி செயல்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தான் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்து போனதை எல்லாம் பிரதமர் மோடி மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற எந்த செயலும் தமிழகத்தில் நடைபெறவில்லை,பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சி நடத்தக்கூடிய மாநில முதல்வர்களை , பிரதமர் தனது விருப்பப்படி விமர்சிக்கின்ற அரசியல் அநாகரிகத்தை தவிர்க்க வேண்டும் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பிருந்த ஆளுநர்களும் கிடப்பில் போட்டார்கள், இப்போதுள்ள ஆளுநரை கேட்க வேண்டாம் அவர் தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்திக் கொண்டிருக்கிறார்.திமுக ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை தமிழக ஆளுநர் ரவி நடத்திக் கொண்டிருக்கிறார்.இந்த பிரச்சினையில் மாநில அரசு முடிவெடுத்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஒருமுறைக்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளது.மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய அநியாயம் ,கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.இப்போதும் ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இப்பொழுதாவது உச்சநீதிமன்றத்தை மதித்து ஆளுநர் செயல்பாட வேண்டும்.திமுகவிற்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. அதில் அவர்கள் உறுதியாக இருப்பதால் பாஜக போன்ற கட்சிகள் அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள்.சமூகநீதி, நாத்திகம், மாநில உரிமைப் பிரச்சனை போன்றவற்றில் திமுக தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.தங்கள் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்று தமிழக முதல்வரும் திரும்ப, திரும்ப சொல்கிறார்.திமுகவிற்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் முயற்சி மேற்கொள்கிறார்கள்.ஒரு பொய்யை திரும்ப , திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற நம்பிக்கை அண்ணாமலை போன்றோருக்கு இருக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

 

Tags : The rival government is running against the Tamil Nadu government Governor, e. Comm. Mutharajan charge

Share via