தேரோட்ட பாதுகாப்பை அறநிலையத்துறை உறுதிப்படுத்தவேண்டும்-ஆம்ஆத்மி வசீகரன்

by Editor / 28-04-2022 08:31:35am
 தேரோட்ட பாதுகாப்பை அறநிலையத்துறை உறுதிப்படுத்தவேண்டும்-ஆம்ஆத்மி வசீகரன்

தஞ்சாவூர் தேரோட்டம் 11 பேர் உயிரிழப்பு, தேரோட்ட பாதுகாப்பை அறநிலையத்துறை உறுதிப்படுத்தவேண்டும்-ஆம்ஆத்மி வசீகரன் வலியுறுத்தல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) நடந்த தேரோட்டத்தின்போது தேரில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் கோயில் தேரோட்டங்களில் விபத்துகள், குறிப்பாக மின்சார விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல் முறை அல்ல.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணியிலும், குடியாத்தம் அருகிலும் அடுத்தடுத்த நாளில் இரண்டு தேர் விபத்துகள் நடந்தன, இதனால்  உயிரிழப்புகள் ஏற்பட்டன.
மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து தேரோட்டங்களுக்கான ஏற்பாடுகளின்போது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து திடீரென ஒரு அக்கறை உருவானது. அதையடுத்து தேர்த் திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக சில விதிமுறைகள் அப்பொழுது வகுக்கப்பட்டன.

ஆனால், கால ஓட்டத்தில் அது தொடர்பான எச்சரிக்கை உணர்வு மங்கித் தேய்ந்துபோவதே இது போன்ற விபத்துகள் மீண்டும் மீண்டும் நடக்கக் காரணமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆரணியிலும், குடியாத்தம் அருகிலும் அடுத்தடுத்த நாளில் நடந்த இந்த இரண்டு விபத்துகளை அடுத்து, தேரோட்டங்களை நடத்துவதற்கு சில விதிமுறைகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
அதாவது தேரோட்டங்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்படவேண்டும், தேரோட்டத்துக்கு முன்னதாக பொதுப்பணித்துறையை சேர்ந்தவர்கள் தேரின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து சான்றளிக்கவேண்டும் என்பவை அந்த விதிமுறைகளில் சில.

இப்போது தஞ்சாவூர் அடுத்த களிமேட்டில் நடந்த விபத்துக்கு முன்னதாக உரிய முறையில் அனுமதி பெற்றார்களா, இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? அரசாங்கத் தரப்பில் என்ன விதமான கவனக்குறைவுகள் இந்த விபத்துக்குக் காரணமாயின என்பது இன்னும் அரசு ஆராய வேண்டும்.

இந்த ஆண்டிலேயே பல சிறு சிறு தேரோட்ட விபத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துள்ளன. சில நாள்களுக்கு முன்பு நாமக்கல் நகரில் ஒரு மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போதும் இதே போல உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசி தேர் சேதமானதாகவும், மின் ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த விபத்துகள் எல்லாம் பழைய விதிமுறைகளைப் பின்பற்றிய பிறகும், விதிமுறைகளின் போதாமையால் நடந்தவையா? அல்லது அந்த விதிமுறைகளை பின்பற்றாததால் நடந்தவையா என்பதும் ஆராயப்படவேண்டும்.

தமிழக அரசு தேரோட்ட பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்ற படுகிறதா என்பதை தமிழக அறநிலையத்துறை உறுதிபடுத்திய பிறகே தேரோட்ட அனுமதிகள் வழங்க வேண்டும். இது போன்ற உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும்.

தஞ்சாவூர் களிமேடு தேரோட்ட நிகழ்வில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும் தமிழக ஆம்ஆத்மிகட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags : The Trust Department should ensure the safety of the vehicle-Aam Aadmi charm

Share via