மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும்,பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை செந்தில்பாலாஜி
மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு செய்திகளையும் பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிநாட்டில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு தொடர்பான புகார்களும், அதுதொடர்பான செய்திகளும் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதனைத்தொடர்ந்து மின்வெட்டு தொடர்பாக அதிமுக சமீபத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது இதற்கு மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சட்டமன்றத்தில் பதிலளித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் மின் நுகர்வு உயர்ந்து வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது. குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குஜராத், மராட்டியத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது. அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒருநாள் மின் உற்பத்திக்கு 72000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 டன் நிலக்கரி மட்டுமே அளித்தது. மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாத போதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பாஜக ஆளும் மாநிலங்களில் மின்வெட்டு எவ்வாறு நிகழ்கிறது. தமிழகத்தில் மட்டுமே மின்வெட்டு இருப்பது போல் தோற்றத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக தான், சொந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறதா?” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்...
Tags :