குதிரையை தாக்கிக் கொன்ற சிறுத்தை - வனத்துறை எச்சரிக்கை

by Staff / 04-05-2022 12:19:46pm
குதிரையை தாக்கிக் கொன்ற சிறுத்தை - வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே பேளாளம் - நெல்லுமார் சாலையில் பெங்களூரைச் சேர்ந்த அல்லி உல்லாகான் (50) என்பவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில், 5 வயது மதிக்கத்தக்க பெண் குதிரை ஒன்று கடும் சேட்டை செய்ததால் பணியாளர்கள் அதன்; முன்னங்கால்களை கட்டிப் போட்டுள்ளனர்.

 கடந்த 01 ஆம் தேதி அதிகாலை பண்ணைக்குள் நுழைந்த மர்மவிலங்கு ஒன்று குதிரைகளை தாக்க முயன்றுள்ளது. அப்போது அனைத்து குதிரைகளும் தப்பிச்சென்ற நிலையில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பெண் குதிரை நடக்க முடியாமல் அங்கேயே நின்றதுள்ளது.

அப்போது மர்மவிலங்கு அந்த குதிரையின் மீது பாய்ந்து கழுத்தை கடித்துக் குதறி கொன்று உடலை சாப்பிட்டுச் சென்றது. காலையில் வழக்கம்போல பண்ணைக்கு வந்த பணியாளர்கள் பெண் குதிரை உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த தளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குதிரையை தாக்கி கொன்றது சிறுத்தையா அல்லது புலியா என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் உயிரிழந்த குதிரையில் உடலை அங்கிருந்து எடுக்காமல் அந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுத்தை ஒன்று குதிரை பண்ணைக்குள் புகுந்து அங்கு உயிரிழந்து கிடந்த குதிரையின் உடலை சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனால் குதிரையை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதியாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தளி, பேளாளம், நெல்லுமார், ஆச்சுபாலம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via