விசாரணைக்கு சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்- 4 பேர் கைது

by Staff / 12-05-2022 05:18:23pm
விசாரணைக்கு சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்- 4 பேர் கைது

கடலூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இதற்காக அங்கு பெரிய இரும்பு தளவாடங்கள், காப்பர் கம்பிகள் ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தானே புயல் வீசியதில் கட்டிடங்கள் சேதமானது.

அந்த கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. எனினும் இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இதனை காவலாளிகள் இரவு பகல் பாராமல் கண்காணித்து வந்தனர்.

கடந்த மாதம் 24ந் தேதி 50க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ஆலைக்குள் புகுந்து இரும்பு தளவாடி பொருட்கள் காப்பர் கம்பிகளை திருடினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

கொள்ளையர்கள் விட்டு சென்ற 2 சரக்கு வாகனங்கள், 26 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் டிரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

நேற்று அதிகாலையில் ஆலை கண்காணிப்பாளர் ரவி தலைமையில் காவலாளிகள் பணியில் இருந்தனர். அப்போது ஏதோ பொருட்கள் விழும் சத்தம் கேட்டது. உஷாரான காவலாளிகள் அங்கு சென்று பார்த்தபோது. 50க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஆலை வளாகத்தில் திருடிகொண்டிருந்தனர். உடனடியாக காவலாளிகள் புதுசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். ஆலையில் திருடிய கொள்ளையர்களை போலீசார் பிடிக்க சென்றபோது அவர்கள் புதருக்குள் புகுந்தனர். என்றாலும் போலீசார் அவர்களை துரத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் போலீசார் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியது. மீதமுள்ள 3 குண்டுகள் வெடிக்கவில்லை.

போலீசார் சுதாரித்துக்கொண்டு விலகியதால் அவர்கள் காயமின்றி தப்பினர். எனினும் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ், புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இதன் விளைவாக இன்று அதிகாலை இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via