குஜராத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு  எதிரான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

by Editor / 23-05-2021 06:52:19pm
குஜராத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு  எதிரான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்



குஜராத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம், குஜராத் மதச் சுதந்திர திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, மோசடி செய்து அல்லது பண உதவி அளித்து வேறு மதத்தைச் சோந்தவரை திருமணம் செய்துகொள்ள வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
சிறுமிகள், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினத்தைச் சோந்தவரை கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கும் நபருக்கு 4 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். ஏதேனும் அமைப்பு கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்நிலையில் மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர், கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை குஜராத் மாநில பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா அறிவித்துள்ளார். மேலும் அவர், விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிரான கடுமையான சட்டத்தையும் கொண்டு வருவோம்' என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via