குஜராத்தில் 3,050 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்து வருகிறது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவுவதால், பஞ்சாப் பாணியில் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி களம் இறங்கியுள்ளது.இந்த நிலையில் மும்முனை போட்டி நிலவும் குஜராத்தில் 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குறிப்பாக நவ்சாரியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும், அகமதாபாத்தில் உள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மைய தலைமையகத்தையும் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை குஜராத் அடைந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் குஜராத் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதாகவும் மோடி குறிப்பிட்டார்.
Tags :