ஹெச்எல்எல் தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் எனும் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு தருமாறு, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம்:
"கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டித்திருப்பதற்கு நன்றி. பெருந்திரளாக தடுப்பூசி செலுத்தப்படுவதே இந்தப் போரில் நமக்கு வாய்த்த பலம்பொருந்திய ஆயுதமாகும். எனவே, பிரதமரின் நோக்கமான 'தற்சார்பு இந்தியா'-வை அடைய உள்நாட்டில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதை வேகப்படுத்த வேண்டும்.சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நவீன மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையமான ஹெச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் நிறுவனம், பயன்படுத்தப்படாமல் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
இந்த உற்பத்தி மையத்திற்கு மத்திய அரசு ஏற்கெனவே ரூ.700 கோடி அளவில் செலவு செய்துள்ளது, இது கிட்டத்தட்ட முடிவுற்ற திட்டமாகும். எனினும், கூடுதல் நிதி இல்லாததால் இது பயன்படுத்தப்படாமல் உள்ளது. யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வராததால், தனியார் மூலம் இதனை இயங்க வைப்பதற்கான முயற்சியும் தோல்வியில் முடிந்தது.இந்த நவீன தடுப்பூசி உற்பத்தி மையம் தமிழகத்தின் நலனுக்காகவும், நம் நாட்டின் நலனுக்காகவும் விரைவில் இயங்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனால், நாட்டின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும். இதனால், நம் நாட்டின் குறிப்பாக, தமிழகத்தின் தடுப்பூசி தேவையை நாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.எனவே, இந்தத் தடுப்பூசி உற்பத்தி மையத்தை கடந்த கால கடன்கள் எதனையும் கருத்தில்கொள்ளாமல், மாநில அரசுக்கு குத்தகைக்கு தருமாறும், அதனை இயக்க முழு சுதந்திரம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அதனை இயக்க தகுதியான தனியார் ஒப்பந்ததாரரை மாநில அரசு உடனடியாக அடையாளம் கண்டு, மிக விரைவில் அம்மையத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மையத்தில் மத்திய அரசு முதலீடு செய்த பணம், மத்திய அரசுக்கு திரும்பி கிடைப்பதற்கான நடவடிக்கைகள், தடுப்பூசி மையத்தில் உற்பத்தி தொடங்கிய பின்னர் தொடங்கப்படும்.
எனவே, ஹெச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags :