தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே  கையிருப்பில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 31-05-2021 05:27:19pm
  தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே  கையிருப்பில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



 சென்னையில் நடமாடும் மளிகை கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் தொடங்கி வைத்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், "குற்றச்சாட்டுகளை வைப்பதைக் காட்டிலும் தடுப்பூசியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அரசுக்கு உறுதுணையாக இருந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். தடுப்பூசிகளை பொறுத்தவரை இதுவரை மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு வந்திருப்பது 83 லட்சம் தடுப்பூசிகள். தடுப்பூசிகளை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் கட்டியிருக்கும் தொகை ரூபாய் 85 கோடியே 48 லட்சம் இதன் மூலம் நாம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம். இதில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. 
இவற்றில் மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர வேண்டும். மத்திய அரசு நமக்கு அளித்துள்ள 83 லட்சமும், நாம் கொள்முதல் செய்துள்ள 13 லட்சமும் சேர்த்து 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 87 லட்சம். தற்போது தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தவேண்டும் என்பதற்காக தமிழக அரசின் சார்பில் உலகளாவிய கொரோனா தடுப்பூசி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டு எச்.எல்.எல். ஆலையை தடுப்பூசி தயாரிப்பதற்காக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அமைச்சர்களிடம் இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்று கூறினார்.

 

Tags :

Share via