நீட் நுழைவு தேர்வு 18.72 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும் நடக்கிறது. இதில், 18.72 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகள் மற்றும் ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு, இன்று நாடு முழுதும், 3,500 மையங்களில் நடக்கிறது.
பிற்பகலில் தேர்வு
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட, 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட, 18.72 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உட்பட, 1.50 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்; 18 நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.
பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. பகல் 1:30 மணிக்கு பின் யாரும் தேர்வு மையத்துக்குள் வர அனுமதி கிடையாது.
'ஹிஜாப், டர்பன்' போன்ற கலாசார உடைகள் அணிந்திருந்தால், அவர்கள் பகல் 12:30 மணிக்கு முன், தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். தேர்வு மையத்தில் பரிசோதனைக்கு
ஒத்துழைக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள்
ஹால் டிக்கெட் நகல், புகைப்படம், அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டை, அவற்றின் நகல்கள், 'சானிடைசர்' பாட்டில் ஆகியவற்றை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.
தேர்வு மையத்தில் 'பால் பாயின்ட் பேனா' மற்றும் 'என் 95' வகை முக கவசம் வழங்கப்படும். 'மொபைல் போன்' உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், காகிதங்கள், குறிப்புகள் உள்ளிட்டவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
தொப்பி, 'வாட்ச், பெல்ட், ஷூ' அணிந்திருக்கக் கூடாது. கம்மல், மூக்குத்தி, தலை 'கிளிப்' உள்ளிட்ட, ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மெல்லிய வகை ஆடை, சாதாரண காலணிகள் அணிந்திருக்க வேண்டும் என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வில், 720 மதிப்பெண்ணுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தொடர்பாக, 200 கேள்விகள் கேட்கப்படும். சரியான பதிலுக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான ஒவ்வொரு விடைக்கும், 1 மதிப்பெண் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : 18.72 lakh candidates appear for NEET entrance exam