புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள்  நியமனம் செல்லும்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

by Editor / 02-06-2021 03:56:08pm
புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள்  நியமனம் செல்லும்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு 



புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுவை சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் கொரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகியோரை நியமன எம் எல் ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்குத் தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.அந்த மனுவில், சட்டவிதிகளின் படி பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த மே 20ல் விசாரணைக்கு வந்த போது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு வாதம் வைத்தி ருந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்து, நியமனத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via