ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ரூ.3.52 கோடி செலவு

by Editor / 19-10-2021 05:18:47pm
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ரூ.3.52 கோடி செலவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், போயஸ் தோட்டத்தின் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தியது, இருப்பினும் விசாரணை அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.


இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் செலவு செய்துள்ளதாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார்.


அதாவது நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ஜெயலலிதா விசாரணை ஆணையம் தொடர்பாக சில தகவல்களை கேட்டு நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் கோமளாவிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.


இந்த மனுவிற்கு கோமளா அளித்த பதிலில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் தேதி இறந்தது குறித்து விசாரணை செய்வதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு நியமித்தது.உச்ச நீதிமன்றம் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு தடையாணை பிறப்பித்துள்ளது. இந்த தடையாணை தற்போது வரை நடைமுறையில் உள்ளது.


இந்த விசாரணைக்காக அரசு இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இந்த ஆணையம் 2017 நவம்பர் 22ஆம் தேதி முதல் 2019 ஏப்ரல் 26ஆம் தேதி வரை மொத்தம் 154 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசால் கடைசியாக இவ்வாணையத்தின் கால அளவு 2019 ஜூலை 25 ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.


அந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 ரூபாய் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலையும் வழக்கறிஞர் பிரம்மா ஆர்டிஐ மூலம் பெற்றுள்ளார்.தமிழ்நாடு அரசு சார்புச் செயலாளருக்கு விண்ணப்பித்த மற்றொரு மனுவில், 2001 முதல் 2021 ஆம் ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில் மொத்தம் 24 விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via