நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் சோனியா காந்திக்கு நாளை மீண்டும் ஆஜராக சம்மன்

by Editor / 26-07-2022 09:23:07pm
நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில்  சோனியா காந்திக்கு நாளை மீண்டும் ஆஜராக சம்மன்

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

யங் இந்தியா பிரைவேட் லிட். நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் 5 நாட்கள் விசாரணை நடத்தியது.இதனையடுத்து, சோனியா காந்தியிடம் கடந்த வாரம் வியாழக்கிழமை முதல்முறையாக விசாரணை நடத்தியது.இதன் தொடர்ச்சியாக இன்று 2வது நாளாக விசாரணை நடத்தியது.இன்றைய விசாரணையின்போது 10க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுத்துப்பூர்வமாக எழுப்பி, அதற்கான பதில்களை எழுதுமாறு சோனியா காந்தியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.


சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் எம்பிக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.சோனியா காந்தியிடம் விசாரணை நடந்த அறைக்கு அருகில் மற்றொரு அறையில் பிரியங்கா காந்தி காத்திருந்தார். அவர் தனது தாய் பயன்படுத்தும் மருந்துகளுடன் காத்திருந்ததாகவும், தேவைப்பட்டால் உடனே வழங்க அவர் தயாராக அங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, அமலாக்கத்துறை சார்பில் 2 மருத்துவர்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டன.இன்றைய விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்கு வருமாறு சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : Sonia Gandhi summoned to appear again tomorrow in National Herald fund scam case

Share via