இங்கிலாந்து விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 1500 கார்கள் எரிந்து சேதமானது.

by Editor / 12-10-2023 10:19:40pm
இங்கிலாந்து விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 1500 கார்கள் எரிந்து சேதமானது.


 இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 45 கி.மீ வடக்கே பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன் விளங்கி வருகிறது. இங்கு சர்வதேச விமான நிலையம் இயங்குகிறது. வழக்கம்போல நேற்றிரவு விமான சேவை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

 இதனால் அங்கிருந்த கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. சிறிதுநேரத்தில் கட்டிடம் முழுவதும் குபுகுபுவென எரிந்தது. கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் பயங்கர புகை மண்டலம் சூழ்ந்தது.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்தும் ரசாயனம் தெளித்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்குள் தீ பரவுவதை தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன. மேலும் பலமாடி கார் பார்க்கிங் கட்டிடம் தீக்கிரையானது. தீயணைப்பு பணியின்போது புகைமூட்டத்தில் சிக்கியதில் மூச்சு திணறி 6 தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


 இந்த விபத்து சம்பவம் காரணமாக விமான நிலையம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும் தீ விபத்துக்கு காரணமான லூடன் விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. லூடன் விமான நிலையத்திற்கு வரவிருக்கும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. லூடன் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதியடைந்தனர். தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது

 

Tags : தீ விபத்தால் 1500 கார்கள் எரிந்து சேதமானது.

Share via

More stories

Logo