இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் இணையும்-ஹரியானா முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார்
பாஜக சிறுபான்மை அணியின் 3 நாள் தேசிய பயிற்சி முகாம் டெல்லி அருகே உள்ள குர்கானில் நடைபெற்று வருகிறது. இதனை தொடங்கிவைத்துப் பேசிய மனோகர் லால் கட்டார், நாடு சுதந்திரம் அடைந்தபோது பிரிவினையை சந்தித்தது வலி மிகுந்த துயரமான நிகழ்வு என தெரிவித்தார்.
காங்கிரஸில் இருந்த சிலரின் அதிகார ஆசை காரணமாகவே பிரிவினை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருந்து விலகி இருக்க காங்கிரஸ் முடிவெடுத்திருந்தால் பிரிவினை நிகழ்ந்திருக்காது என தெரிவித்தார்.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கவே விரும்புகிறது என தெரிவித்த மனோகர் லால் கட்டார், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணையும்போது இந்தியா – பாகிஸ்தான் – பங்களாதேஷ் ஏன் இணையக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
இந்த இணைப்பு ஏற்பட நீண்ட காலம் ஆகாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டு காங்கிரஸ் செயல்படுவதாக விமர்சித்த மனோகர் லால் கட்டார், நாட்டல் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் அது வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பாஜகவின் குறிக்கோள் அதுவல்ல என தெரிவித்த ஹரியானா முதலமைச்சர், பாஜகவும் அப்படி இருந்திருந்தால் அது நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ, உலகிற்கோ எதையும் செய்திருக்காது என்றார்.அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சியே பாஜகவின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags : India and Pakistan Reunite - Haryana Chief Minister Manohar Lal Khattar