புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே  ,பாடல் புகழ் தஞ்சை ராமையாதாஸ்

by Editor / 24-07-2021 07:43:12pm
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே  ,பாடல் புகழ் தஞ்சை ராமையாதாஸ்

 

தஞ்சை ராமையாதாஸ் (பிறப்பு -ஜூன் 5, 1914 ) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.


 தஞ்சாவூர், மானம்பூச்சாவடியில் நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு ரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர்.


ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி என்பதாகும்.


இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார்.இதனை அடுத்து நாகி ரெட்டியின் "பாதாள பைரவி" படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.


இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி" என்ற திரைப்படமாகியது. இப்படத்தில் இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.


புகழ்பெற்ற பாடல்கள்
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)
சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு (குலேபகாவலி)
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... (குலேபகாவலி)
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா (மணாளனே மங்கையின் பாக்கியம்)
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)
 

 

Tags :

Share via