திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.ல்.ஏ.க்கள் அமைதி பேரணி

by Editor / 07-08-2022 09:45:46am
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.ல்.ஏ.க்கள் அமைதி பேரணி

மறைந்த திமுக தலைவரும் ,முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஓமந்தூர் வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகில் இருந்து மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், திமுக தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு கருணாநிதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

அதன்படி இன்று காலை சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பேரணி நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்றது. திமுக-வினர் அமைதி பேரணி நடத்தியதால், அண்ணா சாலை, வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியில், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி, தயாநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தொடங்கிய பேரணி, அமைதியான முறையில் சென்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முடிவடைந்தது. பின்னர் அங்கு கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் மரியாதை செலுத்தினர். இதேபோல், மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.ல்.ஏ.க்கள் அமைதி பேரணி
 

Tags :

Share via