ஆப்கன் ராணுவத்திற்கு ஆதரவாக விமான தாக்குதல் தொடரும்: அமெரிக்க படை

by Admin / 10-08-2021 03:13:08pm
ஆப்கன் ராணுவத்திற்கு ஆதரவாக விமான தாக்குதல் தொடரும்: அமெரிக்க படை

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா், அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தலிபான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை ஆப்கானிஸ்தானின் 421 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பத்திரிகை செயலாளர் ஜான் கிர்பி கூறியது:

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் இறுதிக்குள் ராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜான் பதிலளிக்கவில்லை.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்ப கடந்த ஆக.7ஆம் தேதி அமெரிக்கா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via