மீண்டும் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

by Editor / 07-06-2021 05:50:05pm
மீண்டும் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 


 

தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் மீண்டும் விடப்படுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க இருப்பதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
குன்னுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார். தொடர்ந்து கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை அவர் வழங்கினார். மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருள்களையும் வழங்கினார்.
பின்னர் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்ததோடு, வேட்டாம்பட்டியில் உள்ள  கட்டுப்படுத்தப்பட்ட மண்டலத்திற்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்ரமணியன், "தமிழ்நாடு அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 928 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்பு பூஞ்சை நோய்க்கு 3,840 தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும், 35ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன.1907ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூரில் தொடங்கப்பட்ட தடுப்பூசி நிறுவனம், ஒன்றிய அரசின் சுகாதார செயலரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அந்தத் தடுப்பூசி நிறுவனத்தில் மாதம் ஒரு கோடி  கொரோனா தடுப்பூசி மருந்துகளை குப்பியில் நிரப்பி வழங்குவதற்கான வசதிகள் உள்ளன.இந்நிறுவனம் இவ்வாறு தயாராக உள்ள நிலையில், தடுப்பூசிகளுக்கான மூலப்பொருள்களை ஒன்றிய அரசு வழங்குவதுடன் அதற்கான அனுமதியையும் அளிக்க வேண்டும். அதேபோல், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிலையத்திலும் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்தவார். தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் மீண்டும் விடப்படுவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க உள்ளோம்" என்றார்.

 

Tags :

Share via