சர்வதேச புகைப்பட போட்டி சென்னை பாலுவிற்கு தங்கம்
சென்னை அண்ணா நகரில் வசிப்பவர் பாலு; கட்டட பொறியாளர். பொழுது போக்காக புகைப்படம் எடுப்பவர். மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியின் உறுப்பினர். சிறு வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், 'வைல்டு லைப் மற்றும் நேச்சர்' படங்கள் எடுப்பதில் கெட்டிக்காரர்.
சர்வதேச அளவில் நடைபெறும் புகைப்பட போட்டியில் பங்கேற்று, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.மும்பையில் இயங்கி வரும் பழமையான 'போட்டோகிராபி சொசைட்டி ஆப் இந்தியா' சமீபத்தில் சர்வதேச அளவிலான புகைப்பட போட்டியை நடத்தியது. இதில், 'நேச்சர்' படப் பிரிவில், முதல் பரிசை பாலு பெற்றுள்ளார்.ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள, மங்கல்ஜோடி என்ற பிரபலமான பறவைகள் சரணாலயத்திற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த 'பர்பிள்ஹாரன்' என்றழைக்கப்படும் செந்நாரை பறவை, ஒரு பாம்பை வேட்டையாடிப் பிடித்தது. அந்தப் பாம்போ, பறவையை கொன்றுவிடும் வேகத்தோடு கழுத்தை இறுக்கிப் பிடித்தது. இருந்த போதும் பாம்பைப் பிடித்த பிடியை விடாமல், பறவை பறந்து சென்றது. இந்தக் காட்சியை விட்டுவிடாமல் பாலு படம் எடுத்தார். இந்தப் படத்திற்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது.
''இதுவரை எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும், இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. எத்தனையோ வெளிநாட்டு புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய படங்களுக்கு மத்தியில், என் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சி,'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பாலு.அவரது இ -மெயில் முகவரி: mailbalu1970@gmail.com
Tags :