கள்ளக்குறிச்சி கலவரத்தில் வாகனங்களை தீவைத்து எரித்த 4 பேர் குண்டர்சட்டத்தில் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கனியமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
பள்ளி பொருட்கள் சூறையாடப்பட்டதோடு, காவல்துறை வாகனங்களும்,பள்ளியின் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேலும் காவலர்களும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமிரா மற்றும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கள் சாலை, புது பல்லகச்சேரி கிராமம், சின்ன சேலம் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த நான்கு நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டனர். அவர்கள் வாகனத்தை எரித்ததோடு, போலீசார் மீது கல்வீசி தாக்கியதாகவும், மாடுகளை திருடி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Tags :