அரசு விரைவுபேரூந்தில் 10 சதவீதம் தள்ளுபடி கட்டண சலுகை
தமிழகத்தில் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் ஊருக்கு சென்று திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.ஏற்கனவே மொத்தமாக 10 பயணச்சீட்டுக்கு மேல் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கட்டண சலுகை இருந்துவரும் நிலையில் தற்போது இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது. அதாவது பயணிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை விழா காலங்களில் பொருந்தாது என்றும் இதர நாட்களில் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு பல்வேறு சலுகைகளை வழங்கினாலும் தமிழகத்திலுள்ள முன்பதிவு மையங்கள் தற்போது தனியார் வசம் உள்ளதால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Tags :