சேலத்தில் மனைவியை அடித்துக்கொன்றது ஏன் கணவரின் பகீர் வாக்குமூலம்

by Staff / 14-10-2022 02:17:35pm
சேலத்தில் மனைவியை அடித்துக்கொன்றது ஏன் கணவரின் பகீர் வாக்குமூலம்

சேலம் சீலநாயக்கன்பட்டி, வேலு நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 42). இவரது மனைவி கார்த்திகை செவ்வி (35). இவர்களுக்கு பாலசத்யா (10) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் இருந்தவர்கள் வழக்கம் போல சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அதிகாலை 4 மணி அளவில் சிறுமி பாலசத்யா தூக்க கலக்கத்தில் தனது அம்மாவை தேடி எழுந்துள்ளார். அப்போது அருகில் படுத்திருந்த கார்த்திகை செல்வி முகத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கட்டையால் அடித்து மனைவியை கொன்று விட்டு தப்பிய ராஜசேகரன் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு ராஜசேகரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் சேலம் அழைத்து வரப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் தனியார் ஷோரூமில் காவலாளியாக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி கார்த்திகை செல்வி வீட்டில் இருந்த படியே டெய்லரிங் வேலை செய்து வந்தார். இருவரின் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தோம். நான் எனது சம்பள பணத்தை வீட்டுக்கு சரியாக தரமாட்டேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் நான் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன். அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவேன். இதனால் எனது மனைவி, சம்பாதிக்கும் பணத்தை இப்படி குடித்தே அழிக்கிறாயே?, இப்படி இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவது? குழந்தையை கவனிப்பது எப்படி? வாழ்க்கையில் முன்னேறுவது?, என என்னிடம் கடிந்து கொள்வார்.

சம்பவம் நடந்த அன்றும் நான் போதையில் வீட்டுக்கு வந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகிலிருந்த ரீப்பர் கட்டையை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கினேன். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனால் பயந்து போன நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். பின்னர் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா?, என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via