600 விவசாயிகள் வளர்ச்சி மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

by Editor / 17-10-2022 09:44:36am
600 விவசாயிகள் வளர்ச்சி மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு உதவும் பல்வேறு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், மத்திய வேளாண் துறை சார்பில் ‘பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா (PMKSK)’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான 600 வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றை டெல்லியில் இன்று நடைபெறும் ‘கிசான் சம்மான் சம்மேளன் 2022’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் வேளாண்மை தொடர்பான 1,500 ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர் ஏற்பாடு செய்திருக்கும் 300 கண்காட்சி அரங்குகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் 12-வது தவணைத் தொகையாக 2000 ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சம்மேளனத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த விவசாயிகள், விவசாயம் தொடர்பான ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். காணொலி வாயிலாகவும் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், சுமார் 1 கோடி பேர் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

பிஎம்கேஎஸ்கே மூலம் ‘ஒரு நாடு ஒரு உரம்’ என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே உள்ள சுமார் 3.3 லட்சம் சில்லறை உர விற்பனையாளர்களை இந்த மையங்களில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகளை வழங்குதல், மண் மற்றும் விதைகளை ஆய்வு செய்தல் போன்ற உதவிகளை விவசாயிகளுக்கு  இந்த மையங்கள் வழங்குகின்றன. மேலும் இவற்றின் வாயிலாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாடகைக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

 

Tags :

Share via