தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப் போறீங்களா
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தீபாவளி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.
பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 80-ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ பயன்படுத்துவதோ( வெடிப்பதோ) கூடாது.
எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் ( ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுபத்தி உபயோகித்து ஆபத்துக்களை தவிர்க்கவும்.
Tags :