டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்
தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டில் இருந்த காற்று மாசு தற்போது அதிகரித்து வருகிறது. டெல்லி அரசு முறையாக கட்டுப்பாடுகளை விதித்து காற்றுமாசை குறைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் விதிக்கப்பட்டிந்த பட்டாசு தடையை மீறி பலர் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து 350 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355ஆக இருந்த நிலையில், இன்று 372ஆக உயர்ந்துள்ளது. மதுரா சாலை பகுதியில் 340ஆக இருந்த நிலையில், இன்று 364ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு அபாயம் என்ற நிலையை எட்டியது.
இதனால், காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர். இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை உடனடியாக மூடுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :