வெள்ளி கட்டி திருடிய வழக்கில் 2 பேர் சிறையிலடைப்பு

by Staff / 03-11-2022 04:38:26pm
வெள்ளி கட்டி திருடிய வழக்கில்  2 பேர் சிறையிலடைப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வடமாநிலங்களை இணைக்கும் இந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ரெய்பூரில் இருந்து, சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் சந்தோஷ், சாகர், விக்ராந்த் ஆகிய மூவரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ வெள்ளியை வாங்கி கொண்டு, தனியார் காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காரின் பின்தொடர்ந்து இரண்டு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஓமலூர் அருகே ஆர். சி. செட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டல் முன்பாக வெள்ளி கொண்டு வந்த காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து வெள்ளியை கொண்டு வந்த காரின் ஓட்டுனருடன் சேர்ந்து, 6 பேர் கும்பல், காரில் வந்த விக்ராந்த், சாகர் ஆகிய இருவரையும் மிரட்டி காரில் இருந்து கீழே இறங்கி விட்டுவிட்டு, காரில் பின்புறமாக தூங்கி கொண்டிருந்த சந்தோஷுடன் 100 கிலோ வெள்ளி மற்றும் காரையும் எடுத்து சென்றனர். சங்ககிரி அருகே சென்ற மர்ம கும்பல் சந்தோஷையும் மிரட்டி கீழே இறக்கி விட்டு, காருடன் 100 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், 100 கிலோ வெள்ளியை கடத்தி சென்ற காரை போலீசார் கைப்பற்றிய, போலீசார் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய கேரள மாநிலம் கோங்காடு பகுதியை சேர்ந்த விஜயன் மகன் விஜிஜ் (25), கோவை காஸ்மோ காலனியை சேர்ந்த அருணாசலம் மகன் பூபதி என்கிற மார்த்தாண்ட பூபதி (39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஐந்து பேரிடம் இருந்தும் இருந்து சுமார் பத்து கிலோ வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மொத்தமாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், வெள்ளி கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via