இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள்

by Staff / 18-11-2022 07:49:35am
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள்

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் தமிழக மீனவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டின் கடல்பகுதி மிகக்குறுகிய கடல்பகுதியாக உள்ளது. ராமேசுவரத்திலிருந்து 12 கடல்மைல் தூரத்தில் தான் சர்வதேச எல்லை உள்ளது.

முதல் 3 கடல் மைல் தூரத்துக்கு பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் நிலையில், 4 முதல் 7 கடல் மைல் தூரத்துக்கு கடலில் பாறையிருப்பதால், அதை தாண்டித்தான் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. 8வது கடல்மைல் எல்லை தொடங்கி சற்று தூரம் சென்றவுடனேயே சர்வதேச கடல் எல்லை தொடங்கியதும், மீனவர்களுக்கு பிரச்னைகள் தொடங்குகின்றன.

அங்கே இறால் மீன்கள் அதிகம் கிடைப்பதால், அதற்காக மீனவர்கள் செல்லும்போது தான் இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழக மீனவர்கள் தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்டவலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதுடன், கடல் வளங்களையும் அழித்து வருவதாகவும், இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றே இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இரு நாட்டு பிரச்சினைக்கும் விரைவாக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்பதால், இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட வேண்டும் மீனவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். தமிழக மீனவர்களின் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளே விரைந்து நடவடிக்கை எடுத்து ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 

Tags :

Share via