குமரியில் 2 வாலிபர்கள் கொலை

கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜன் (24). இவர் மீது 3 வழக்குகள் உள்ளன. ஜேசுராஜன் முருகன் குன்றம் பகுதியில் உள்ள நான்கு வழிசாலையில் இன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஜேசுராஜனின் நண்பரான சுனாமி காலனியை சேர்ந்த ஜெனிஸ் (26) வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் ஜெனிசிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்வின் என்பவர் தங்களை குத்திவிட்டு ஓடியதாக அவர் போலீசில் கூறினார். இந்தநிலையில் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் புதரில் வடக்கு குண்டலை சேர்ந்த செல்வின் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட ஜேசுராஜன் மற்றும் செல்வின், படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஜெனிஸ் ஆகிய மூன்று பேர்களும் நண்பர்களாவார்கள். இவர்கள் மூன்று பேரும் கஞ்சா பழக்கம் கொண்டவர்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டார்.
Tags :