கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 23-11-2022 03:54:47pm
 கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்தவர் ராமன்ரகு (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (46). 2 பேரும், பழனிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கினர். இந்தநிலையில் நேற்று ராமன்ரகு-உஷா தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விடுதி அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராமன்ரகு, உஷா ஆகிய 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு உஷா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில், நாங்கள் சொந்த ஊரில் கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்து வந்தோம். மேலும் ஊரில் 7 குடும்பத்தினர் எங்களை வேண்டுமென்ற ஒரு வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். எனவே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். எங்களது 13 வயது மகன், 9 வயது மகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று உஷா எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது, நண்பகல் 12 மணி அளவில் ராமன்ரகு-உஷா தம்பதியை பார்த்ததாகவும், அதன்பிறகு அவர்களை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் 12 மணிக்கு பிறகு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கேரளாவில் உள்ள ராமன்ரகுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபிறகே தம்பதி தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் கூறினர். தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

Tags :

Share via