"ஆணவம் என்றால் என்ன?"

by Admin / 24-07-2021 04:21:42pm

 

 இதை அறிந்து கொள்ள ஒருவன் விழைந்தான். அவன் ஒரு துறவியிடம் சென்றான். " சுவாமிஜி ஆணவம் என்றால் என்ன" என்று கேட்டான்.

 அதற்கு சுவாமிஜி இதை காபி குடித்துக்கொண்டே பேசலாமா என்றார். " ஓ தாராளமாக செய்யலாமே, அது நன்றாக இருக்குமே!" என்றான் அவன்.

 இருவருக்கும் காபி தரப்பட்டது. அவன் குடிப்பதற்கு முன்னமே சொன்னான்:
 " காஃபி நல்ல நறுமணம் நிறைந்ததாக இருக்கிறது. குடிப்பதற்கு ஏற்ற பதமான சூட்டில் இருக்கிறது" என்று.

சொன்னவன், அதை எடுத்து பருகலாம் என்று முனைந்த பொழுது, அதில் ஒரு ஈ விழுந்து தத்தளிப்பதைப் பார்த்தான். அதைக் குடிக்க அவனுக்கு மனம் ஒப்பவில்லை. எதை சொல்லி இதைத் தவிர்ப்பது என்று நினைத்துப் பார்த்தான்.

"நான் காபி குடிப்பது இல்லை. டீ குடிக்கும் பழக்கம் உடையவன்" என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் சுவாமிஜி காபி குடிக்கலாமா என்று கேட்டபொழுது நான் அதை ஒத்துக் கொண்டேனே. இப்பொழுது காபி குடிக்கும் வழக்கம் இல்லை என்று சொன்னால் அது என்னுடைய கவனக் குறைவு என்று கருதிவிட மாட்டாரோ என்று நினைத்தான்.

ஒருவேளை இப்படி சொல்லிவிடலாமா என்று நினைத்தான். வெள்ளிக்கிழமை நான் காபி குடிப்பது இல்லை என்று சொல்லிவிடலாமா என்று எண்ணினான். அப்படி சொன்னாலும் இன்று வெள்ளிக்கிழமை  என்று முதலிலேயே நான் நினைக்காமல் போனேனே என்று சுவாமிஜி என்னை தவறாக நினைத்து விடுவாரே என்று நினைத்தான்.

ஒருவேளை நாம் இப்படி செய்யலாமா? குடிப்பது போல வாய் அருகில் கொண்டு சென்று கைதவறி கீழே விழுந்ததாக கோப்பையை  கீழே போட்டு விடலாமா என்று எண்ணினான். அதுவும் முறையற்ற செயல். முறை அற்றதை செய்பவன் என்று சுவாமிஜி என்னை நினைக்க மாட்டாரா? ஒரு கோப்பையை உடைக்கலாமா? தூய்மையான இந்த இடத்தை மாசுபடுத்தலாமா? இது சரியில்லையே என்று நினைத்தான்.

இவன் காபி குடிக்கத் தயங்குவதைப் பார்த்த சுவாமிஜி அதிலே ஈ விழுந்து இருப்பதை கண்டுகொண்டார். பின்னர் அதை மெதுவாக எடுத்து வெளியிலே விட்டு அதை மெதுவாக ஊதி அந்த ஈரப் பசையை நீக்க முயன்றார். இவ்வாறு செய்து கொண்டே அவனிடம் சொன்னார்:

"ஆணவம் என்றால் என்ன?" என்று கேட்டாயே! இப்பொழுது நடந்ததுதான் ஆணவம். ஓர் உயிர் வாழ்வா? சாவா? என்று தன்னுடைய உயிருக்காக, தன்னுடைய வாழ்விற்காக போராடிக் கொண்டிருக்கும் பொழுதும் அதைப்பற்றி சிறிதும் எண்ணாமல் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது தான் ஆணவம் எனப் படுவது. இதுவே அகம்பாவம் என்றும் சொல்லப்படுகிறது.

 இந்த "நான்" இருக்கும் வரை மெய்ஞானம் பெற இயலாது. இந்த "நான்",  "எனது" இருக்கும் வரை இன்பம் பெறுவதும் கடினமே.

ஆணவம் என்பது அறியாமை.
அறியாமை என்றால் அறிவு இல்லாமை அல்ல. அறிவு விளங்காமை.
அறிவு இல்லாமை எனக் கொண்டு ஆணவம் என்பது இல்லாத ஒரு பொருள் எனக் கருதுகின்றனர் சிலர்.
இல்லாத பொருள் எப்படி செயலாற்ற முடியும்?
எனவே அது ஒரு உள் பொருளே. என்றும் உள்ள பொருள்.

நம்மிடம் இயல்பாகவே உள்ள நம் அறிவை முழுமையாக செயல் இழக்க வைக்கிறது அல்லது அழிவை திரிபுபடுத்தி விபரீதமாக எண்ண வைக்கிறது. இதுவே ஆணவத்தின் தொழில்.

 ஆணவம் பொருளால் ஒன்றே. எனினும் அதன் சக்திகள் பல. எனவே அது ஒரே நேரத்தில் அனைத்து உயிர்களிடத்தும் தொழில் படுகிறது.

 ஆணவம் "நான்"  ,   " எனது" என்ற வடிவில் வெளிப்படுவது.

 நம்மிடம் ஆணவம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள "நான்" & " எனது" என்று நாம் செயல்படுகிறோமா?, எண்ணுகிறோமா! என்று சிந்தித்துப் பார்த்தால் ஆணவம் நம்மிடம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.

இவையே ஆணவத்தின் இயல்புகள்.

 "திருவருளால் ஆணவத்தில் இருந்து விடுபடுவோம். இன்பம் சுகிப்போம்."

 

Tags :

Share via