பிறந்து 24 நாள்களே ஆன பெண் குழந்தை திடீர் பலி

by Staff / 31-12-2022 12:45:20pm
பிறந்து 24 நாள்களே ஆன பெண் குழந்தை திடீர் பலி

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சிவகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி ஜான்சிராணிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் போதே நஞ்சை குடித்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, 8 நாள்கள் அதற்காக குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டனர். அதன் பின் குழந்தைக்கு அடிக்கடி சளி, மூச்சுத் திணறல் இருந்து வந்துள்ளது. இதற்காக சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதன் பின் கடந்த 27ம் தேதி காலை குழந்தைக்கு உடல் சரியில்லாமல் போகவே கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, நேற்று காலை ஜான்சி ராணி குழந்தைக்கு பால் கொடுத்து படுக்க வைத்துவிட்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து குழந்தையை தொட்டு பார்த்தபோது எவ்வித அசைவும் இல்லையாம். உடனடியாக தாண்டாம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories