அம்மை நோயால் 400 மாடுகள் பாதிப்பு

by Staff / 04-01-2023 01:24:39pm
அம்மை நோயால் 400 மாடுகள் பாதிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கிராமம்தோறும் சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் கால்களில் முதலில் வீக்கம் ஏற்படுகிறது.

அதைத்தொடர்ந்து, உடலில் கொப்பளங்கள் உண்டாகின்றன. உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைவதுடன், தீவனம் உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது. நோய் பாதிப்பு காரணமாக படுக்க முடியாததால், பல நாட்களுக்கு நின்றவாறே இருக்கின்றன. மற்ற மாடுகளுக்கு நோய் பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம்.

கடந்த சில வாரங்களாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம், தேவ ம்பாடி, சேர்வைக்கா ரன்பாளையம், மண்ணூர், கானல்புதூர், ஆர். பொன்னாபுரம், காந்தி ஆசிரமம், கோவிந்தனூர், புரவிப்பாளையம், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 23 மாடுகள் உயிரிழந்துள்ளன.சொந்த நிலத்திலேயே புதைக்கும் வேதனையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறவை மாடுகளை காப்பாற்ற, கால்நடைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Tags :

Share via