ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

by Staff / 16-02-2023 05:17:22pm
ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிப்பதாகவும், இல்லத்திலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தோர்  கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்; குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன?. இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும்.இல்லத்திலிருந்து எவ்வளவு பேர் கடத்தப்பட்டனர்? எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டனர்? என்பன உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via