4.9 ஏக்கர் நிலத்தை போலி  பவர் பத்திரம் மூலம்  மோசடி செய்த 2 பேர் கைது.

by Editor / 21-02-2023 09:43:32pm
 4.9 ஏக்கர் நிலத்தை போலி  பவர் பத்திரம் மூலம்  மோசடி செய்த  2 பேர் கைது.

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீல் என்பவர் கீழதிருச்செந்தூர் கிராமத்தில் 4.9 ஏக்கர் நிலத்தை மீரான்  சாகிபு என்பவரிடமிருந்து கிரையம் பெற்று அனுபவம் செய்து வந்துள்ளார். மேற்படி முகமது ஜெமீல் 1987ல் இறந்த பின்பு மேற்படி சொத்தை அவரது மகன் முகமது நூகு தம்பி மற்றும் அவருடன் உடன்பிறந்தோர் அனுபவம் செய்து வந்த நிலையில், உடன்குடி, கிறிஸ்டியாநகரம் கோலாப் தெருவை சேர்ந்த ஜெயசிங் மகன் செல்வகுமார் (38) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி 4 ஏக்கர் 9 செண்டு நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறந்துபோன முகமது ஜெமீல் போன்று வேறு ஒருவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து கடந்த 29.09.2020 அன்று மேற்படி செல்வகுமாருக்கு மோசடியாக பவர் பத்திர பதிவு செய்து கொடுத்தும், மோசடி பொது அதிகார ஆவணத்தில் மந்திரமூர்த்தி மற்றும் ஸ்ரீமுருகன் ஆகியோர் மோசடி விபரம் தெரிந்து சாட்சியாக கையொப்பம் செய்துள்ளார்கள்.

பின்னர் செல்வகுமார், ஐகோர்ட்துரை என்பவருக்கு கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்தி  பின்னர் அதை ரத்து செய்துவிட்டு திருச்செந்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு 2021ம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து முகமது நூகு தம்பி என்பவர் கடந்த 27.04.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தார்.

 புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு கடந்த 04.01.2023 அன்று 2வது எதிரி  செல்வகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதனையடுத்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை தேடிவந்த நிலையில், மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆள்மாறாட்ட நபரான திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த காஜா முகைதீன் மகன் முகமது பாரூக் (53) மற்றும் ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி காலங்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செய்யது அப்பாஸ் மகன் நூர் பிரதௌஸ் (53) ஆகிய 2 பேரையும்  நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  போலீசார் இன்று முகமது பாரூக் என்பவரை மேலப்பாளையத்தில் வைத்தும், நூர் பிர்தௌஸ் என்பவரை உடன்குடியில் வைத்தும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 4.9 ஏக்கர் நிலத்தை போலி  பவர் பத்திரம் மூலம்  மோசடி செய்த  2 பேர் கைது.
 

Tags :

Share via