பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

by Editor / 21-02-2023 10:03:33pm
பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.


கர்நாடக கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் டி.ரூபா ஐபிஎஸ். இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பதவியில் இருப்பவர் ரோஹிணி ஐஏஎஸ்.  இவர்கள் இருவரும் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொண்டது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ரோஹிணி ஐஏஎஸ் மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது எம்.எல்.ஏ.வான மகேஷ் உடன் மோதல் போக்கு இருந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சுமத்தினர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒரு உணவகத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு அரசியல்வாதியை ஏன் ஒரு அதிகாரி சந்திக்கிறார். சமரசம் செய்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ரூபா, ரோஹிணி மீது 20 வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் ரோஹிணியின் 7 தனிப்பட்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ரூபா பதிவிட்டார். மேலும், இந்தப் படங்களை ரோஹிணி 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஷேர் செய்துள்ளார் என்றும் இது ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது என்றும் ரூபா பதிவிட்டிருந்தார்.

ரூபாவுக்கு பதிலளித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, ரூபாவுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாகவும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது எனக் கூறினார்.

பொதுவெளியில் இருவரின் வரம்பு மீறிய மோதல் போக்கு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த மாநில  உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நிலையில், ரூபா ஐபிஎஸ்  மற்றும் ரோஹிணி சிந்தூரி இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags : பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்

Share via