தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம்ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.

by Editor / 10-09-2024 08:08:25am
தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம்ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகின்றன. கடந்த 3-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சருக்கு தமிழ் சங்கங்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதேபோல், சிகாகோவில் ஈட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சென்னையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதாகவும், திருச்சியில் அந்நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இதனால், 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய முதலீடுகள் கிடைத்துள்ளன. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளில் உலகளாவிய முதன்மை நிறுவனமான Jabil திருச்சிராப்பள்ளியில் ரூ.2000 கோடியில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 5000 வேலை வாய்ப்புகள் உருவாகும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான புதிய கிளை உருவாக்கப்படும்.


ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் தனது உற்பத்தியை விரிவுபடுத்தி, 365 பேருக்கான வேலை வாய்ப்புகளை அளிக்கவுள்ளது. இளைஞர்களின் திறன், MSMEகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கு ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், நமது ஒட்டுமொத்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகிறது”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம்ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.

Share via