மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம்.. 

by Editor / 08-03-2023 07:52:38am
மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம்.. 


பெண்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
 
 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின் உள்ள வரலாறை தெரிந்து கொள்ளலாம்.  

பெண்களை பலவீனமானவர்கள் என பலரும் கருதுகிறார்கள். 

ஆனால் பெண்களைப் போல வலிமையானவர்கள் யாரும் இல்லை. 

அவர்களிடம் கவர்ச்சியான சக்திகள் இல்லாவிட்டாலும், அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. 

அவர்களால் உங்களை ஊக்குவிக்க முடியும். 

வாழ்க்கையில் தங்களையும் வானளவுக்கு உயர்த்த அவர்களால் முடியும். 

இல்லத்தரசிகள், ஆசிரியைகள், பொருளாதார நிபுணர்கள், பொறியாளர்கள், பெண்கள் என எல்லா துறைகளிலும் முன்னேறி இந்த உலகத்திற்கு மேன்மையை அளிப்பவர்கள்.

ஆணாதிக்கத்தின் தடைகளை தகர்த்து, சமூகத் தடைகளைத் தாண்டி, சக்தி வாய்ந்த சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள் இன்றைய பெண்கள். 

 மகளிர் தினம் எப்போது? 

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. 

1900 ஆண்டுகளில் இருந்தே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

இதற்கென தனி வரலாறும் உண்டு. 

இந்தாண்டின் மகளிர் தின கருப்பொருளாக பாகுபாட்டிற்கும், சமத்துவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது கொடுக்கப்பட்டுள்ளது. 

 வரலாறு 

1908ஆம் ஆண்டில் பெண்கள் மீதான அடக்குமுறை, பாலின சமத்துவமின்மை குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. 

15 ஆயிரம் பெண்கள் நியூயார்க்கில் குறுகிய வேலை நேரம், 
வாக்களிக்கும் உரிமை மற்றும் சிறந்த ஊதியம் ஆகியவற்றைக் கோரி மாபெரும் பேரணி நடத்தினர். 

அவர்களின் போராட்டத்தை கவுரவிக்கும் விதமாக 1909 ஆம் ஆண்டு, முதல் மகளிர் தினம் அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டது. 

1910 இல், உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. 

ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் அலுவலகத்தின் தலைவரான கிளாரா ஜெட்கின் இதை முன்மொழிந்தார். 

இதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி 1911ஆம் ஆண்டில், ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. 

1913 மற்றும் 1914க்கு இடையில், ரஷ்யாவில் பெண்கள் முதல் மகளிர் தினத்தை பிப்ரவரி 23 அன்று கொண்டாடினர். 

அதன் பிறகு தான் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் தொடங்கியது.

 1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தது. 

இந்தியாவில் அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் ஆண்களை விட அதிக நேரம் பெண்களே உழைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. 

சராசரியாக ஆண்கள் 7 மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் 9 முதல் 11, மணி நேரம் உழைக்கிறார்களாம். 

அதுமட்டுமா இந்தியாவில் பாலின பேதம் இன்றும் ஊதியரீதியாக தொடர்கிறது. 

ஆண்களை காட்டிலும் 34% குறைந்த ஊதியத்தை பெண்கள் பெறுகிறார்கள் என 2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உரிமைகள் சம அளவில் இன்னும் வந்துவிடவில்லை. 

சர்வதேச மகளிர் தினம் என்பது எந்த நாடு, குழு அல்லது அமைப்புக்கும் பிரத்தியேகமானதல்ல. 

அந்த நாள் ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமானது. 

பெண்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும். 

பெண்கள் எதிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வரை இந்த நாள் கொண்டாடப்படுவது அவசியமே. 

 

Tags :

Share via