தூத்துக்குடியில் அதிகரிக்கும் திருட்டுக்கள்- தடம் மாறும் இளைஞர்கள். 

by Editor / 22-03-2023 11:04:18pm
தூத்துக்குடியில் அதிகரிக்கும் திருட்டுக்கள்- தடம் மாறும் இளைஞர்கள். 

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர்புரம் கிழக்கு பகுதியில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பலவேசம் (51) என்பவர் மெடிக்கல் ஸ்டோரும் அவரது கடைக்கு பக்கத்தில் தூத்துக்குடி  டுவிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜமுருகன் (33) என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்கடந்த 21ஆம் தேதி இரவு மேற்படி பலவேசம் மற்றும் ராஜமுருகன் ஆகிய இருவரும் தங்களது கடைகளை அடைத்து பூட்டிவிட்டு இன்று (23.03.2023) காலை வந்து பார்க்கும்போது இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு பலவேசம் கடையில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூபாய் 2000/- பணமும், அதே போன்று ராஜமுருகன் கடையில் இருந்த ரூபாய் 3000/- பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேற்படி பாதிக்கப்பட்ட இருவரும் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சத்யராஜ்க்கு சம்பந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் தலைமையில்  தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் திவீர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் மகன் கருப்பசாமி (23), கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு குண்டல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மகன் வினோத் (19), ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆகாஷ் (19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த  இளஞ்சிறார்கள் 2 பேர் ஆகியோர்  மேற்படி பலவேசம் மற்றும் ராஜமுருகன் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட செல்போன் மற்றும் ரூபாய் 2050/- பணத்தையும் பறிமுதல் செய்து எதிரிகள்  கருப்பசாமி, வினோத், மற்றும் ஆகாஷ் ஆகிய 3 பேரை சிறையில் அடைத்தும், இளஞசிறார்கள் 2 பேரை திருநெல்வேலி மாவட்டம் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட எதிரிகளில் கருப்பசாமி மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், சிப்காட் மற்றும் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், வினோத் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், இளஞ்சிறார் ஒருவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், இளஞ்சிறார் மற்றொருவர் மீது ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் அதிகரிக்கும் திருட்டுக்கள்- தடம் மாறும் இளைஞர்கள். 
 

Tags : தடம் மாறும் இளைஞர்கள். 

Share via