கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து  நவீன ரோவர் கருவி மூலம் வரைபடம் தயாரிப்பு 

by Editor / 21-09-2021 04:05:18pm
 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து  நவீன ரோவர் கருவி மூலம் வரைபடம் தயாரிப்பு 


தமிழ்நாடு முழுவதும் திருக்கோ யில்களுக்கு சொந்தமான நிலங்கள் நவீன ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் ரோவர் கருவியின் மூலம் வரைபடம் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை 8.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நவீன ஜிஐஎஸ் தொழில்நுட்பத்துடன் நில அளவை செய்து வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் பி.கே. சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் அனைத்து கோயில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் ஜிஐஎஸ் என்ற நவீன தொழில்நுட்பத்தின்படி மேம்பிங் பணியை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வழங்கிய சிபாரிசின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 200 நில அளவையாளர்களைக் கொண்டு அனைத்து நில அளவை பணிகளும் மேற்கெள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அருள்மிகு கெட்டி விநாயகர் திருக்கோயில், அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி வட்டம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் வகையறாத் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில், அருள்மிகு திருமலைகுமார சுவாமி திருக்கோயில், பண்பொழி, சேலம் மாவட்டம், அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், தேனீ மாவட்டம், ஆண்டிபட்டி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
திருக்கோயில்கள், அறக்கட்டளை களுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், விவசாய நிலங்கள், காலிமனைகள், காலியிடங்கள் என அனைத்துக்கும் அளவீடு செய்து வரைபடம் தயாரிக்கும் பணி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோவர் கருவிகளை கொண்டு தொடங்கியுள்ளது. இக்கருவியை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுவும்போது செயற்கைகோள் மூலம் அந்த இடத்தின் வரைபடம் நமக்கு கிடைத்துவிடும். விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பா ளர்களிடம் இருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo