சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலையில் வந்த வானதி ஸ்ரீநிவாசன்
தமிழக சட்டப்பேரவைக்கு கறுப்பு சேலை அணிந்து வந்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் அங்கிருந்த நிருபர்கள் "நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?" எனக் கேட்க, "ஐயோ இன்னிக்கா அது. எனக்குத் தெரியாதே" என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார். அவரது கறுப்பு நிற ஆடையால் சட்டப்பேரவைக்கு வெளியேயும் உள்ளேயும் இன்று சில சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.முன்னதாக, ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று (மார்ச் 27) காலை சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம். எல். ஏ. , க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும், ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, "தடையானை வாங்கிய வழக்கை நடத்தியுள்ளனர். இது ஜனநாயகப் படுகொலை.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக தொடர்ந்து போராடுவோம். சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி இருக்கிறோம். உள்ளிருப்புப் போராட்டமும் நடத்துவோம். எங்களது போராட்டம் பாஜக, நரேந்திர மோடிக்கு எதிரானது" என்று தெரிவித்தார்.அதன்பின்னர் அவைக்கு வருகை தந்தார் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன். அப்போது அங்கிருந்த நிருபர்கள் வானதி ஸ்ரீநிவாசனிடம், "நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? " எனக் கேட்க, "ஐயோ இன்னிக்கா அது. எனக்கு தெரியாதே" என்று கூறி சிரித்தபடியே நகர்ந்து சென்றார். சில அடிகள் அவர் நகர்ந்ததுமே அங்கு நின்றிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, ''எங்களுக்கு ஆதரவா?'' என்று கேட்க, வானதி ஸ்ரீநிவாசன் ''இல்லை. இல்லை'' என்று சிரித்துக் கொண்டே தலை நிமிராமல் சொன்னார்.
Tags :